மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
தொடர்ந்து ஏழாவது நாளாக அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், சிறுத்தை இடப்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
தற்போதைய நிலவரப்படி மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து நேற்று முதல் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்துள்ளனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.