திருவள்ளூரில் குடித்துவிட்டு மதுபோதையில் பிறந்தநாள் கொண்டாடியதைத் தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொடுங்கையூரில் குடித்துவிட்டு மதுபோதையில் நள்ளிரவில் சிலர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் முதலாவது சந்திப்பில் முருகன், சக்திவேல், சரத்குமார் ஆகிய காவலர்கள் ஜீப்பில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது மார்ட்டின் என்ற இளைஞர் நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த கொண்டாட்டத்தில் கொடுங்கையூரைச் சேர்ந்த கலைச்செல்வன், வியாசர்பாடியைச் சேர்ந்த ஜான் ஆல்வின் ஆகியோர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
ரோந்துப்பணிக்காக சென்ற போலீசார் மூன்றுபேரையும் களைந்து செல்லுமாறு அறிவுறுத்த ஆத்திரம் கொண்ட மூவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்க முற்பட்டனர். கற்களைக்கொண்டு போலீசாரை தாக்கியதோடு போலீசார் வைத்திருந்த லத்தியையும் பிடுங்கி தாக்கியுள்ளனர். இதனை போலீசார் ஒருவர் வீடியோவாக பதிவுசெய்த நிலையில் அது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அதன்பிறகு மூன்றுபேரையும் கைது செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.