இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா மாநாடு 9 ந் தேதி அந்தியூரிலிருந்து, பர்கூர் மலை செல்லும் வழியில் உள்ள வனம் என்ற பகுதியில் நடைபெற்றது. அந்த வனத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மாவட்ட செயலாளர் டி.எ. மாதேஸ்வரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலை குறித்தும், அமைப்பு நிலை குறித்தும் மாநிலக்குழு உறுப்பினர்களான பழங்குடி மக்கள் சங்க வி.பி. குணசேகரன், மோகன் குமார் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இந்த மாநாட்டிற்கு அந்தியூர் தாலுகா முழுவதுமிருந்து கம்யூனிஸ்ட் தோழர்கள் பங்கேற்றார்கள். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் அந்தியூர் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக வழக்கறிஞர் எம்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனின் ஜூனியர். மேலும்15 பேர் கொண்ட தாலுகா குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் பவானி வட்ட செயலாளர் கோபால், பவானி நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாலதண்டாயுதம், சந்திரசேகர், வழக்கறிஞர் எல்.சிவராமன் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிறகு மாநாட்டில், “அந்தியூர் தாலுகா மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக, கிடப்பில் போடப்பட்டு இருக்கிற, மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை ஏரி, குளம், குட்டைகளுக்கு கொண்டு வருகிற திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் அவருடைய தொகுதியான எடப்பாடி பகுதிகளில் மேட்டூர் உபரி நீரை வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளுக்கு கொண்டு சென்றுள்ளார். அதைப்போல அந்தியூர் பகுதியில் இருக்கிற குளம், குட்டை, ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீரைக் கொண்டு வருகிற திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் செயல்பட வேண்டும்.
கரோனா காலத்தில் மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வட்டி, அபராத வட்டியுடன் கடன் தொகையை கட்ட வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வேலையின்றி தவிக்கின்ற, வருமானம் இல்லாத இந்த சூழலில் உள்ள மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியை பைனான்ஸ் நிறுவனங்கள் கொடுப்பது மக்களிடையே மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை மதிக்காத இந்த நிறுவனங்கள் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த ஆறு மாத காலத்திற்கான வட்டி அபராத வட்டியை ரத்து செய்து சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த நெருக்கடியை உடனே போக்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் அரசுக்கு கோரிக்கைகளாக வைக்கப்பட்டன.