மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் ஜூலை மாதத்தில் கேஆர்எஸ் அணையில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை, 120 அடி உயரத்தைக் கடந்ததுடன் மளமளவென முழு கொள்ளளவையும் எட்டியது. இந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையும் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது. கடந்த இரண்டு நாள்களாக அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 7522 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
அதேநேரம், காவிரி டெல்டா விவசாயத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீரும், கால்வாய் பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைக் காட்டிலும், நீர் வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் நேற்று 114.98 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 114.08 அடியாக குறைந்து. கடந்த 9 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 6 அடி வரை குறைந்துள்ளது.