பாண்டிச்சேரி டூ பெங்களூர் சாலையில் திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அடுத்த தண்டப்பட்டு அருகே நவம்பர் 13ந்தேதி விடியற்காலை அச்சாலையில் சென்ற வாகனம் ஒன்றில் குரங்கு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த விபத்தில் குரங்கு அடிப்பட்டு பலத்த காயங்களுடன் சாலை ஓரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை பலரும் கண்டும் காணாமல் சென்றுள்ளனர்.
செங்கத்தை சேர்ந்த கமல்ஹாசன், காமராஜ், முருகன் அவ்வழியாக வரும் போது அதனை பார்த்துள்ளனர். உடனே தாங்கள் வந்த வண்டியை நிறுத்திவிட்டு, அந்த குரங்கை தூக்கி கொண்டு செங்கம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது குரங்கின் கால்களின் எலும்பு உடைந்துள்ளது என்பது மருத்துவர்கள் மூலம் அவர்களுக்கு தெரிய வந்தது.
இருப்பினும் செங்கம் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வசதி இல்லாத காரணத்தால், திருவண்ணாமலைக்கு கொண்டு மருத்துவர்கள் செல்லக்கூறியுள்ளனர். அதன்படி திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மனிதன் ஒருவன் சாலையில் கீழே விழுந்து கிடந்தாலே முகத்தை திருப்பிக்கொண்டும், போதையில் விழுந்துக்கிடக்கறான் என பேசும், நடந்துக்கொள்ளும் சமூகத்தில் குரங்குக்காக நின்று உதவிய தகவலை கேள்விப்பட்டு பலரும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.