வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரிய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்துத் தெரிவித்ததாகக் கூறி, ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் அளித்த புகாரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ், சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மே மாதம் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்எஸ் பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாகவும், தொற்று நோய்ப் பரவலைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது எனவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, தனது பேச்சை மறுத்தால் அதை நிரூபிக்க அவரது குரல் மாதிரியை எடுக்க வேண்டும் என்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில், ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும், ஜாமீனை ரத்து செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றும், விரோதப் போக்குடன் மாநில அரசு தற்போது இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக வாதிடப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.