மேட்டூர் அணையில் குருவை சாகுபடிக்காக தண்ணீரை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியாக நாகை மாவட்டம் விளங்கி வருகிறது. காவிரி நீரை நம்பியே மாவட்டத்தில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மேட்டூர் அணை முன்னதாகவே நிரம்பியதை அடுத்து இன்று தமிழக முதலமைச்சர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதனால் இந்தாண்டு குறுவை சாகுபடியை மேற்கொள்ள இயந்திரம் மூலம் உழவு செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் 3.29 கோடி மதிப்பீட்டில் 329.90 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணிக்காக நதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் கீழ்வேளூர் வட்டத்திற்கு உட்பட்ட வலிவலம் மோகனூர் சாட்டியக்குடி வாய்க்கால்கள் துார்வாரும் பணியினால் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்து தூர்வாரும் பணியினை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நாகை மாவட்டத்தில் 80 சதவீத பணிகள் நிறைவேற்றுவதாக ஆட்சியர் தெரிவித்தனர்.
அதேசமயம் கடந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கரில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்படும் குறுவை சாகுபடி இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் சாகுபடியின் பரப்பளவு இரண்டு மடங்காக 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறுமென விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததோடு கூடுதல் பரப்பளவில் குருவை சாகுபடி செய்ய நிலை உருவாகியுள்ளதால் குறுவை சாகுபடிக்கு தேவையான தரமான விதை நெல், உரம், இடுபொருள் உள்ளிட்டவைகளை வழங்குவதோடு குறுவை சாகுபடி செய்யப்படும் நெல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.