காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (12.06.2021) திறந்துவைத்தார்.
திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் திட்டமிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று தஞ்சை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்வதற்காக தூர்வாரப்படும் இடங்களையும் முதல்வர் ஆய்வுசெய்தார். இந்நிலையில், இன்று காலை 11.33 மணி அளவில் மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்காக மலர்தூவி மேட்டூர் அணையைத் திறந்துவைத்தார் மு.க. ஸ்டாலின். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிமுதல் 10 ஆயிரம் கன அடிவரை நீர் திறக்கப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணையைத் திறக்கும் முதல் திமுக முதல்வர் என்ற பெருமையை ஸ்டாலின் பெற்றார். மேட்டூர் அணையை இதுவரை அமைச்சர்கள் திறந்துவந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு அதிமுகவின் முதல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையைத் திறந்துவைத்திருந்தார். இந்நிலையில், திமுகவின் முதல் முதல்வராக ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று திறந்ததுவைத்தார்.
மேட்டூர் அணையில் 88வது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. இரண்டாவது ஆண்டாக ஜுன் 12இல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் இதனால் பாசன வசதிபெறும். இன்று திறக்கப்பட்ட தண்ணீர், வரும் 16ஆம் தேதி அல்லது 17ஆம் தேதி கல்லணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 17 முறை ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
அந்தத் தண்ணீரானது அடுத்த மூன்று நாட்களில் திருச்சிக்கும் அதற்கடுத்த நாளில் தஞ்சைக்கும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடரும். தற்போது டெல்டா மாவட்டங்களில், தஞ்சாவூரில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரும், திருவாரூரில் 87,700 ஏக்கரும், நாகையில் 4,500 ஏக்கரும், மயிலாடுதுறையில் 96,800 ஏக்கரும், திருச்சியில் 10,600 ஏக்கரும், அரியலூரில் 4,900 ஏக்கரும், கடலூரில் 40,500 ஏக்கருக்கு என மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்வதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.