தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே, நவம்பர் முதல் வாரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அது தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் பட்சத்தில், நவம்பர் இரண்டாம் வாரமான 7ஆம் தேதி 11 தேதி தமிழகத்தில் மிக கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு, காரைக்கால், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக மழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பர் மாதத்தில் 123% அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் இயல்பான மழை பொழிந்து, இரண்டாவது வாரத்தின் போது படிப்படியாக அதிகரித்து இயல்பை விட அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.