வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (01.12.2023) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தற்போது தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கில் சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 940 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (02.12.2023) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்னர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா - வட தமிழகத்தின் கடல் பகுதிகளில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4 ஆம் தேதி புயலாக கரையைக் கடக்கக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புயல் கரையைக் கடப்பது தாமதமாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், டிசம்பர் 4 ஆம் தேதி புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.