திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜக பெண் நிர்வாகிகள் குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்கள் முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக பேச்சாளரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். திமுக பேச்சாளரின் இத்தகையப் பேச்சிற்கு எம்.பி.கனிமொழி வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகிகளைத் தரக்குறைவாக பேசியதாக நடிகை மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “யார் தலைமையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. அந்த மேடையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இருந்தார். அதே மேடையில் அவரை தட்டிக் கேட்க வேண்டும் என்று ஏன் அவருக்குத் தோன்றவில்லை. நான்கு நாட்கள் கழித்து அவரைத் திட்டினேன் எனச் சொல்லுகிறார். மேடையில் என்னைப் பேசும் பொழுது அமைதியாக இருந்தீர்கள். அதன் பின்பு அவரை அழைத்துத் திட்டினேன் எனச் சொல்லிவிட்டு, நான் விளம்பரம் தேட ஆசைப்படுகிறேன் எனச் சொல்லுகிறீர்கள். என் மேல் தான் மறுபடியும் குற்றச்சாட்டினை வைக்கிறீர்கள்.
இம்மாதிரியான ஆண்களின் மனநிலை எப்படி இருக்கிறது. நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாரும் பெண்களைப் பற்றி தவறாகப் பேசமாட்டார்கள். இதன் காரணமாக டெல்லி வந்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். இந்தப் புகாரை எடுத்துக்கொண்டு அவர்களை விசாரிக்கின்றோம் எனச் சொல்லி இருக்கிறார்கள்” எனக் கூறினார்.