கீரமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் வேட்பு மனு வாங்க வந்த அதிகாரி 1 மணிக்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டதால் அதிகாரி வருவார் என்று மாலை வரை காத்திருந்த உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பயிரிடுவோர் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள் கிழமை வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி அரசியல் கட்சிகள் பல அணிகளாக வேட்பு மனு தாக்கல் செய்யவும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவும் ஏராளமான உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில் காலையிலேயே சென்ற பலர் வேட்பு மனுக்களை பெற்று மனு தாக்கல் செய்தனர். அதன் பிறகு சுமார் 1 மணிக்கு தேர்தல் அதிகாரி உள்பட கூட்டுறவு சங்க அலுவலர்கள் அனைவரும் சங்க அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். அப்போது அங்கு மனு தாக்கலுக்காக வந்து காத்திருந்த சங்க உறுப்பினர்கள் மதிய உணவுக்காக அதிகாரி செல்வதாக மாலை வரை காத்திருந்தனர். ஆனால் மாலை வரை தேர்தல் நடத்தும் அதிகாரி வராததால் பூட்டி அலுவலகம் முன்பு கூட்டுறவு சங்கம், மற்றும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பூட்டிய கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு கீரமங்கலம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.