திருச்சி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கி மதியம் 2 மணி வரை மாநகராட்சி காமராஜர் மன்றத்தில் உள்ள லூர்துசாமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பல்வேறு குறைகள் குறித்தும் அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.
குறிப்பாக 12வது வார்டு பகுதியில் அமைக்கப்படும் குடிநீர் குழாய்கள் தரம் இல்லை என்றும் வாரம் ஒரு குழாய்கள் மாற்றப்படுவதாகவும் மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை முன் வைத்தார். அதேபோல் மாமன்ற உறுப்பினர்களின் அதிகாரம் என்ன என்பது குறித்து அதற்கான ஆவணங்களை அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று 17வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன் அதற்கான அரசாணை விரைவில் பெறப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் வாரிசு அடிப்படையில் மாநகராட்சியில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த குடும்பங்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கபட்டது. மேலும் மாநகராட்சியில் இதுவரை மொத்தம் 40 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு பெற்று காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், திறந்த மைக்கில் கவுன்சிலர்கள் சொல்வதை செய்யக்கூடாது என்றும், அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்றும் கூறியதாக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதற்கு பதில் அளித்த மேயர் அன்பழகன், ஒரு குறிப்பிட்ட மாமன்ற உறுப்பினர் செய்த நடவடிக்கையால் அவரை மட்டும் குறிப்பிட்டு ஆணையர் கூறினார். எனவே தவறான தகவலை பதிவிட வேண்டாம் என்று தெரிவித்தார்.
அதேபோல் திருச்சி மாநகராட்சியில் உள்ள அங்கன்வாடி மையங்கள் அனைத்தையும் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்த புள்ளி கோரப்பட்டுள்ளதாக விரைவில் அதற்கான பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்தார். தற்போது திருச்சி மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு இயக்கப்பட்டு வரும் அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டு அந்த வாகனங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் திருச்சி மாநகராட்சியில் டெக்னிக்கல் உதவியாளராக பணியாற்றக்கூடிய பலர் 30 ஆண்டுகளுக்கு மேலாக அதே பணியில் நீடித்து வருகின்றனர். எனவே அவர்களுக்கான பதவி உயர்வை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் அன்பழகன், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் காலியாக உள்ள தனியாருக்கு சொந்தமான பராமரிக்கப்படாமல் கிடக்கும் நிலங்களில் இரண்டு இடங்களை மாநகராட்சி கைப்பற்றி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களால் இதுவரை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஒப்பந்த புள்ளிகள் குறித்தும் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.