அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அருகே உள்ள அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை புதிய சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்திற்காக நாளை மறுநாள் ஆனந்தவாடி கிராமத்தில் கருத்து கேட்பு கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சிமெண்ட் ஆலை கடந்த 40 ஆண்டுகளாக சுண்ணாம்புக்கல் அரியலூர் தாலுக்காவில் வெட்டியெடுத்து சிமெண்ட் உற்பத்தி செய்து வருகிறது . 40 ஆண்டுகாலமாக கல்லங்குறிச்சி ,உசேனபாத் , கயர்லாபாத் பகுதியில் அனுமதி பெற்று 1250 ஏக்கர் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் வெட்டப்பட்டன . வெட்டி முடிக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் வெட்டுவதற்கான அனுமதி காலம் 2001 ஆம் ஆண்டும் 2005 ஆம் ஆண்டும் முடிந்து விட்டன.
கல்லங்குறிச்சி, உசேனபாத் ஊராட்சி கொல்லாபுரம் அருகேயும் , கயர்லா பாத் ஆகிய கிராமங்களில் சுண்ணாம்புக்கல் அதிக ஆழம் இல்லை . பத்தடி இருபதடி மட்டுமே சுண்ணாம்புக்கல் இருந்தது . அந்த சுண்ணாம்புக்கல் கற்கள் வெட்டி எடுத்து அந்த சுரங்கங்களும் அனுமதியும் முடிந்துவிட்டன. வெட்டி முடித்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அரசு சிமெண்ட் ஆலை நிறுவனம் என்ன செய்து உள்ளது? அதனுடைய காலம் முடிந்துவிட்டது முடிந்த பிறகு அந்த சுரங்கங்களை என்ன செய்தது? நெய்வேலி போன்ற நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் திட்டமிட்டு அந்த சுரங்கங்களை மூடி மரங்களை நட்டு உள்ளது. நீர் நிலையாக மாற்றியுள்ளது. சூரிய மின்சக்தி நிறுவனம் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கத்தின் மீது மண்ணை கொட்டி சமமாக்கி அதன்மேல் அது நிறுவியுள்ளது.
ஆனால் அரியலூரில் செயல்பட்டு வரும் அரியலூர் அரசு சிமெண்ட் அரியலூர் தாலுகாவில் வெட்டப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அது போன்ற எந்த விதமான ஏற்பாடும் செய்யாமல் 1250 ஏக்கர் சுரங்கங்கள் அனுமதி முடிந்த பிறகு பத்தாண்டுகள் 15 ஆண்டுகள் ஆகியும் அதை எந்த விதமான பணியும் செய்யாமல் பாலைவனம் போல வைத்துள்ளது. அதனை நீர் தேக்கமாக மாற்றி இருக்கலாம் அல்லது அடர்ந்த காடுகளாக மாற்றியிருக்கலாம். இரண்டும் செய்யாமல் அரசிடம் ஒப்படைக்காமல் இவர்களே வைத்துக் கொண்டிருப்பது நியாயமா? இது சட்டத்தின்படி சரியானதா ?
ஆகையால் ஆனந்தவாடியில் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் இந்த அரசு சிமெண்ட் ஆலைக்கு இனிமேல் புதிதாக எந்த சுரங்க அனுமதியும் அனுமதிக்கக்கூடாது. இதுவரை முடிந்த கல்லங்ககுறிச்சி, உசேனபாத் கொல்லாபுரம் , கயர்லாபாத் கிராமத்தில் உள்ள ஆயிரத்து 250 ஏக்கர் முடிந்த சுரங்கத்தில் நீர்நிலையாகவோ, அடர்ந்த காடுகளாகவோ, சூரிய மின் உற்பத்தி தகடுகள் வைத்து மின் உற்பத்தி நிலையமாகவோ மாற்ற வேண்டும்.
அதற்கு அரியலூர் நகரில் உள்ள மற்றும் ஒன்றியங்களில் உள்ள செட்டி ஏரி போன்ற 500 ஏரி , குளம் குட்டைகளில் இருந்து கருப்பு மண்வெட்டி கொண்டு வந்து 5 அடி உயரத்துக்கு வெட்டி முடிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 1250 ஏக்கர் சுரங்கத்தில் நிரப்பி அதில் மரங்களை வைத்து நட்டு அடர்ந்த காடுகளை உருவாக்கி இப்பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் மேம்படும் செய்ய வேண்டும். அது இல்லாமல் இந்த அரசு சிமெண்ட் ஆலையை என்ற ஒரே காரணத்திற்காக அனுமதி அளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எக்காரணத்தை முன்னிட்டும் இந்த அரசு சிமெண்ட் ஆலை வெட்டி முடிக்கப்பட்ட 1250 ஏக்கர் சுரங்கத்தை சீர்திருத்தம் செய்து அரசிடம் ஒப்படைக்கும் வரை அதற்கு எந்தவிதமான புது சுரங்க அனுமதி தரக்கூடாது என்பது அரியலூர் தொகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆகையால் எந்த அனுமதியும் தர வேண்டாம் என்பது அரியலூர் பகுதி தொகுதி பொதுமக்களின் கருத்தாக உள்ளது.