உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 124ல் இருந்து 234 அதிகரித்துள்ளது. இவ்வாறு கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் மருத்துவப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மருத்துவப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்காக, அந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, மூலதனத்தில் 3 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில், செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31, 2020-க்குள் புதிதாக உற்பத்தி செய்யத் துவங்கினால், சலுகைகள் வழங்கப்படும். குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும். தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, மொத்த மூலதனத்தில் 30 சதவீதம் மூலதன மானியம், 20 கோடி ரூபாய் உச்சவரம்பாகக் கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.