தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான், கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் அதிக அளவில் சிகிச்சையில் இருப்பதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் டீன் மற்றும் கூடுதல் மருத்துவ இயக்குநர் உள்ளிட்ட புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 54 கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளும், நாமக்கல்லைச் சேர்ந்த 41 நோயாளிகளும், கரூரைச் சேர்ந்த 26 நோயாளிகளும் என்று மொத்தம் 121 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 121 நபர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஐசோலேசன் வார்டில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் இன்று (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனைவருக்கும் வாழ்த்துகூறி வழியனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது பூரண குணமடைந்து மனமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர்.
மேலும் ரத்தப் பரிசோதனையின்போது தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 19 நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட 28 நாட்களை கடந்த பிறகு இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேரில் சென்று அனைவருக்கும் வாழ்த்துகூறி அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறி வழியனுப்பி வைத்தார். இந்த 28 நபர்களும் எங்களுக்கு, சிறப்பாக மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினர், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் தனது நன்றிகளை சொல்லி என்றனர்.
இந்த 28 நபர்களும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் கலெக்டர் அங்கே பேசும்போது, அசாதாரண சூழ்நிலையிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, சேவை புரிந்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரோஸி வெண்ணிலா, கூடுதல் முதல்வர் மரு.தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.