கோவை மாவட்டம் செல்வபுரம் அருகே உள்ளது எல்.ஐ.சி காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் அதே பகுதியில் மணி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாராயணனுக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் நாராயணன் தனது மெடிக்கல் ஷாப்பை பூட்டிவிட்டு மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் வந்து பார்த்தபோது தனது மெடிக்கல் ஷாப் முழுவதும் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டு இருந்தது.
அதுமட்டுமல்லாமல் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மாத்திரைகள் அனைத்தும் தூக்கி சாலையில் வீசப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த நாராயணனுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்த நாராயணன் சிறிது நேரம் கழித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், நாராயணனின் மெடிக்கல் ஷாப்பை அடித்து துவம்சம் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நாராயணனின் மெடிக்கல் ஷாப்பை அடித்து நொறுக்கும் மர்ம நபர்களின் அடையாளங்கள் அந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.