தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் 103 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5000 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கன மழையினால் தண்ணீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நோய்த் தடுப்பு சிகிச்சை வழங்குவதற்காக இன்று (20.12.2023) 103 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 5000 நபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 108 நபர்களுக்கு காய்ச்சலும், 158 நபர்களுக்கு சளி, இருமல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, பரமக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து 30 மருத்துவ வாகனங்கள், 1 மருத்துவர், 1 செவிலியர், 1 ஆய்வாளர் என்ற விகிதத்தில் வரவழைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 31 மருத்துவ வாகனங்கள் உட்பட மொத்தம் 61 மருத்துவ வாகனங்கள் மூலம் பல்வேறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாளை (21.12.2023) 190 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது. அம்முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் உடல்நிலைகளைப் பரிசோதித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளிலுள்ள நான்கு மண்டல பகுதிகளில் மூன்று பகுதிகளுக்கு இன்று முதல் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலப்பாளையம் மண்டலத்திற்கான நீரேற்றும் நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 27 டேங்கர் லாரிகள் மூலம் அப்பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டால் மண்டல அலுவலகத்தையோ, மாநகராட்சி அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.