திராவிட இயக்கத்தின் கொள்கை பற்றாளராகத் தமிழ் மொழி, இனத்தின் மீது அளவு கடந்த விசுவாசியாக, அரசியல் என்கின்ற பொது வாழ்வில் நேர்மையான மனிதராகப் பெருவாழ்வு வாழ்ந்த மதிமுக ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் வாழ்க்கை 28 ஆம் தேதி அதிகாலை முடிவுக்கு வந்தது.
ஈரோடு அருகே உள்ள பூந்துறை என்கிற கிராமம்தான் இவரது பூர்வீகம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி பள்ளி படிக்கின்ற வயதிலேயே அன்றைய சோசியலிஸ்ட் கட்சியின் தலைவர்களான ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெனாண்டர்ஸ் போன்ற தலைவர்கள் ஈரோட்டில் கூட்டம் நடத்தி அரசியல் வகுப்பு எடுத்தபோது அதில் கலந்து கொண்டவர். அடுத்து கல்லூரியில் படித்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியில் அப்போதே பொறுப்பேற்றார்.
கல்லூரி காலகட்டத்தில் தான் வைகோ அவர்களோடு இணைந்தார். இளமைப் பருவத்திலேயே திமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வந்தார்.
திமுகவில் இருந்து வைகோ பிரிந்து வந்தபோது வைகோவுக்கு தளபதியாக நின்றவர் கணேசமூர்த்தி. அப்போது வைகோவுடன் வந்த 9 மாவட்டச் செயலாளர்களில் இறுதி வரை வைகோவுடன் இருந்தவர் கணேசமூர்த்தி தான். ஒருமுறை எம்எல்ஏ, மூன்று முறை எம்.பி. என அரசியல் அதிகாரம் இவருடன் இருந்து வந்தது. மத்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வந்தார். விவசாய விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு, உயர் மின் கோபுரம் மற்றும் ஐடிபிஎல் என எல்லா போராட்டங்களிலும் முன்னணியில் இருந்து செயல்பட்டவர்.
அதேபோல் தமிழீழ விடுதலைக்குத் துணையாக நின்று பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அன்றைய ஜெயலலிதா ஆட்சியில் வைகோவுடன் கணேசமூர்த்தியையும் பொடா சட்டத்தில் கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அமைதி, அன்பு, பொறுமை தனது அரசியல் வாழ்வில் எவ்வித அடாவடித்தனமும் செய்யாதது, அதேபோல் கொள்கையில் ஒரு சமரசமற்ற போராளியாய் வாழ்ந்தது என்பது அவருக்கு பெருமை தான்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக கணேசமூர்த்தி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி காலை ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சியில் உயிர்க்கொல்லி மாத்திரையை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். உடனடியாக ஈரோடு தனியார் மருத்துவமனையிலும் அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 28 ஆம் தேதி இறந்துவிட்டார். கணேசமூர்த்தியின் இறப்பு மதிமுக பொதுச் செயலாளரான வைகோ உட்படத் தமிழ்த் தேசியவாதிகள் பலருக்கும் மிகுந்த துயரத்தைக் கொடுத்திருக்கிறது.
அன்பு சகோதரரை இழந்துவிட்டேன் என்று கண்ணீர் மல்கப் பேசிய வைகோ, எம்.பி சீட் வழங்காததால்தான் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. திமுகவிடம் இரண்டு சீட் கேளுங்கள் கிடைத்தால் நான் நிற்பதை பற்றி யோசிக்கலாம். இல்லை என்றால் துரை மட்டும் நிற்கட்டும் என்று கூறினார். கல்லூரிக் காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை இழந்துவிட்டேன் என்று நா தழுதழுக்க பேசினார்.