புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல வருடங்களாகவே மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி மாணவியை சிலர் கிண்டல் செய்ததாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 30 ஆம் தேதி மாலை மழையூர் பள்ளியில் இருந்து வெளியே வந்த பாலமுருகன் என்ற மாணவனைத் தாக்கிய கொங்கரக்கோட்டையைச் சேர்ந்த சில இளைஞர்கள் பைக்குகளில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். மாணவன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் கூடியதால் பைக்கில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து மாணவன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தான், மழையூர் பகுதியில் நிலவும் சாதிய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். மழையூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மழையூரில் நேற்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்த நிலையில், யாரோ மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் சதா. சிவக்குமார் காரிலும், கட்சி நிர்வாகி கோமதி அசோகன் உடையிலும் தீ பற்றியதாகக் கூறி விசிகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு வரை நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டிவிடும் பாஜக நிர்வாகி மீதும், போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மறியல் செய்தவர்களுடன் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பேச்சுவார்த்தை நடத்தினார். நள்ளிரவு வரை செல்போன் வெளிச்சத்தில் சாலை மறியல் நடந்தது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை - தஞ்சை பிரதான சாலையில் முள்ளூர் கிராமத்தில் மீண்டும் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது மழையூர்.