Skip to main content

காவிரி குழுமமும், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம்... ஆர்வம் காட்டிய இளைஞர்கள்!

Published on 09/08/2020 | Edited on 09/08/2020

 

mayiladuthurai district blood donation camp peoples, youths

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயர்ந்து வரும் நிலையில்,  குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் ரத்தம் தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் "காவிரி குழுமமும், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் ரத்த தான முகாமை நடத்தினர்.

 

மயிலாடுதுறையில் உள்ள குருஞானசம்பந்தர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் டாக்டர் சிவக்குமார் முன்னிலையில், ரத்தம் வழங்க வந்திருந்த அனைவரையும் காவிரி குழும செயலாளர் சிவக்குமார், சட்ட ஆலோசகர் செள,சிவச்சந்திரன், சுந்தர் உள்ளிட்ட காவிரி குழுமத்தினர் மனமகிழ்ந்து வரவேற்றார்கள்.

mayiladuthurai district blood donation camp peoples, youths

முகாமிற்கு தலைமை வகித்து பேசிய காவிரி அமைப்பின் தலைவரும், எழுத்தாளருமான கோமல் அன்பரசன், "ஊருக்கு நல்லது செய்வோம் என்கிற நோக்கோடு மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக நலப்பணிகளை செய்து வரும் காவிரி அமைப்பு, கரோனா நோய்தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி இந்த முகாம் காவிரி அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்தோம், மேலும் ரத்தம் தேவைப்படும் காலங்களில் இதுபோன்ற முகாம்களை நடத்தி கூடுதலாக ரத்தம் வழங்குவதற்கும் தயாராக இருக்கிறோம்," என்று பேசினார்.

 

முகாம் தொடக்கத்தில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்த மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் ஜனார்த்தனன், அரவிந்த் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் பூமிநாதன், சமூக ஆர்வலர்கள் ராஜ்குமார் ஜெயின், கார்த்திகேயன், மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் சங்க நிர்வாக அலுவலர் மகாலட்சுமி ஆகியோரின் பணிகளைப் பாராட்டி காவிரி அமைப்பு சார்பில் “கோவிட் ஸ்டார்” விருது வழங்கப்பட்டது. 

mayiladuthurai district blood donation camp peoples, youths

ரத்த தான முகாமில் காவிரி அமைப்பின் இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு 60 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். காவிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

 

எளிய மக்களின் தேவை எதுவாகினும் அதை எப்பாடுபட்டேனும் செய்து கொடுத்து வரும் காவிரி அமைப்பின் குருதி வழங்கும் பணியும் மிகச் சிறந்தது என்கிறார்கள் மயிலாடுதுறை வாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்