தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட தயார் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதிரி கிராம சபை கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த மாதிரி கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்த கமல்ஹாசன் பேசியதாவது,
கிராம சபை என்பது போர் அடிக்கும் ஒரு நிகழ்ச்சியாக நகரத்தில் வாழ்பவர்களுக்குத் தோன்றலாம். நகரத்திலே பிறந்து நகரத்திலே ஜொலிப்பவர்கள் கொஞ்சம் பேர் தான், மீதி அனைவருமே கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். முக்கால்வாசிப்பேர் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான், இங்கு நடப்பவற்றை கிராமத்தில் இருக்கும் உங்கள் உறவினர்களிடம் கொண்டு செல்லுங்கள்.
கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 1 முதல் ரூ. 5 கோடி வரை நிதியானது கிராம மக்கள் தொகை, கிராம பஞ்சாயத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. நம்முடைய தமிழகத்தில் 12,526 கிராமங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் கோடிகள் மூலம் பெருக்கிப் பார்த்தால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி 5 ஆண்டுகள் என்றால் எவ்வளவு என நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
நமது கவனமின்மையால் செயல்படுத்த முடியாமல் போன கிராம சபை கூட்டத்தை, மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்துள்ளது. கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மேல்தட்டு மக்களுக்கான கட்சி அல்ல, கிராமத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெற்றாலும் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார்.