கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை என்பதால் நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மாயமான இருவரையும் தேடும் பணி நடைபெற்றது. இறுதியாக தந்தை மீட்கப்பட்ட நிலையில் தற்போது மகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன்னதாக சென்னை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு கடலோர மாவட்டங்களில் அதீத கடல் அலைகள் ஏற்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று மதியம் மூன்று மணி அளவில் பிரேமதாஸ் மற்றும் அவருடைய மகள் ஆதிஷா (7) தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது வந்த ராட்சத அலையில் இருவரும் இழுத்து செல்லப்பட்டனர். இருவரையும் தீவிரமாக அந்த பகுதி மக்கள் தேடிய நிலையில் தந்தை பிரேமதாஸ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 7 வயது சிறுமி ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் ராட்சத அலையால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் அச்சிதெங்கு, ஆலப்புழா, கொடுங்காலூர் உள்ளிட்ட ஊர்களில் கடல் நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. பூந்துறையில் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகளால் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. கடல் சீற்றம் குறித்து மீனவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலில் குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதீத கடல் அலைகள் உருவாவதற்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிக்கப்பட இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.