சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள கோவிலூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு கெமிக்கல் ஆலை என்கிற நாசகார ரசாயன ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி, 4-10-2018 வியாழக்கிழமைன்று மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை பொதுமக்களோடு சேர்ந்து பல்வேறு அமைப்புகளும் நடத்தவுள்ளதாக அறிவிக்க ஆயிரத்திற்கும் அதிகமான போலீசாருடன் ரெட் அலர்ட்டில் இருக்கின்றனர் போலீசார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலம் தொட்டே இயங்கி வரும் தமிழ்நாடு கெமிக்கல் ஆலை என்கிற நாசகார ரசாயன ஆலையின் முக்கிய உற்பத்திப் பொருள் சோடியம் ஹைட்ரோ சல்பேட். இந்த ஆலையில் அடிக்கொரு தடவை ஆலையிலிருந்து பூகம்ப ஒலியும், கடுமையான வீச்சமும் தொடங்க, அடுத்த நிமிடங்களில் மயங்கி விழுந்தவர்கள் ஏராளம்.
சில தருணங்களில் உயிர்ப்பலியும் நடந்திருக்கின்றது என்கின்றது புள்ளி விபரங்கள். பயிர்கள் கருக, இனம் புரியாத நோய்கள் பரவ வாழ வழியின்றி ஊரைக் காலி செய்து பிழைப்புத் தேடி சென்றவர்களும் கணக்கிலடங்காதவர்கள். ஒவ்வொரு முறையும், " ஆலையை எப்போது மூடுவீர்கள்? ஆலைக்குள் என்ன பிரச்சனை? மக்களிடம் கருத்து கேட்டே திறக்க வேண்டும் என்ற உத்தரவு இருந்தும் மக்களிடம் ஏன் கருத்து கேட்கவில்லை? .மக்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை? மருத்துவ பரிசோதனை எப்போது நடத்தப்படும்? விபத்து நடந்த ஆலையை ஏன் மூடக்கூடாது? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த அரசு தரப்பு இதுவரை ஒன்றும் செய்யவில்லையே ஏன்?." என மக்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டும் செவி சாய்க்கவில்லை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களையும் நடத்திப் பார்த்தும் அசையவில்லை ஆலை நிர்வாகம். இதனால் வெகுண்டெழுந்த மக்கள் சுற்றுவட்டார மக்களின் உதவியை நாட, அக்டோபர் 4 அன்று ஆலை முற்றுகைப் போராட்டம் என தீர்மானிக்கப்பட்டது. விபரீதத்தை உணர்ந்த அரசும், "இல்லையில்லை..! உங்கள் கோரிக்கையை அமைதியான வழியில் கூறுங்கள். பரிசீலிக்கின்றோம்." எனக் கூற அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துக்கொண்டனர் பொதுமக்கள் இணைந்த பல்வேறு அமைப்ப்பினர்.
எனினும், தூத்துக்குடியைப் போல் துப்பாக்கிச்சூடு கலவரம் நடந்தாலும் நடக்கலாம் என ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில், டி.ஐ.ஜி, எஸ்.பி, 2 ஏடிஎஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள், 36 இன்ஸ்பெக்டர்கள், 75 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1200 போலீசாரை களமிறக்கியுள்ளது அரசு. இதனால் அப்பகுதியே பதற்றமடைந்துள்ளது.