பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "கல்வி நிலையங்கள், கல்வி நிலையங்களாக மட்டுமே இருக்கட்டும், சீருடை விதிகளை மதிப்போம்.
கர்நாடக மாநிலம், உடுப்பியில் Pre University College (PUC) ஒன்றில், மாணவிகள் சிலர், ஹிஜாப் அணிந்து வந்ததும், அதற்கு எதிர்வினையாக நடந்த சம்பவங்களும், அம்மாநிலத்தையும் தாண்டி, தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. வழக்கம் போலவே, இந்த விவகாரத்திலும், பா.ஜ.க. மீது பழிபோட்டு, பதட்டத்தை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இது கவலை அளிக்கும் விஷயம். கடும் கண்டனத்திற்குரியது.
உடுப்பியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் படிப்பது கல்லூரி அல்ல. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 என்ற மேல்நிலை வகுப்புகள்தான், கர்நாடகத்தில், Pre University College (PUC) எனப்படுகிறது. கல்லூரிகளில் சீருடை இல்லை. எனவே, ஆடை பிரச்சினை இல்லை. ஆனால், பள்ளிகளில் சீருடை இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே பள்ளிக் கூடங்களில் சீருடை முறை இருக்கிறது. அதுபோலதான் உடுப்பியில் பிரச்சினைக்குரிய Pre University College (PUC)யிலும் சீருடை உள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த கல்வி நிலையத்தில், இதுநாள் வரை அனைத்துத் தரப்பு மாணவர்களும், மாணவிகளும் சீருடை அணிந்தே வந்தனர். ஆனால், திடீரென சில மாணவிகள் மட்டும், மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஹிஜாப் அணிந்து வந்ததும், அதற்கு, நிர்வாகம் அனுமதி மறுத்ததும்தான் இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இதுநாள் வரை ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு, திடீரென அனுமதி மறுக்கப்பட்டால், அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளலாம். ஆனால், இதுநாள் வரை இல்லாமல், திடீரென மத அடையாளத்துடன் வந்ததுதான் பிரச்சினையாகியுள்ளது. இதற்கு எதிர்வினையாக, சில மாணவர்களும், மாணவிகளும் காவி துண்டு அணிந்து வந்ததை இப்போது குற்றமாக சித்தரிக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பா.ஜ.க.வை பொறுத்தவரை எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்தவொரு மதத்தின் கோட்பாடுகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை எப்போதுமே பா.ஜ.க. கேள்வி எழுப்பியதில்லை. அவற்றை மதிக்கிறது. மதச்சார்பின்மை என்ற பெயரிலும், முற்போக்கு, பகுத்தறிவு என்ற பெயரிலும், சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை கேலி, கிண்டல், அவதூறு செய்வதைத்தான் பா.ஜ.க. எதிர்க்கிறது. கட்டாய மதமாற்றத்தையும், பயங்கரவாதச் செயல்களையும் எதிர்ப்பதால் சில மதங்களுக்கு எதிராக பா.ஜ.க. இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இது எப்படி மதவாதமாகும் என்பது தெரியவில்லை.
மதச்சார்பின்மை என்பது மதங்களை மறுப்பதும், வெறுப்பதும் அல்ல. அனைத்து மதத்தையும் மதிப்பதுதான் மதச்சார்பின்மை. இதனைதான் நமது அரசியல் சட்டமும் சொல்கிறது. இதுதான் பா.ஜ.க.வின் அடிப்படை கொள்கை.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகத்தில் திடீரென ஹிஜாப் சர்ச்சை எழுவதும், அது தேசிய அளவில் பிரச்சினை ஆக்கப்படுவதும், உலக அளவில் சிலர் கருத்துக்களை தெரிவிப்பதும் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், மத மோதல்கள் நடக்கும். மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அமைதி இருக்காது. இன்னும் ஒருபடி மேலேபோய் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் அச்சமூட்டினார்கள். ஆனால், கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில், கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைவிட அமைதி நிலவுகிறது. அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
இந்த ஒற்றுமையை, அமைதியை குலைக்கவும், தாங்கள் அச்சமூட்டியதுபோல நடக்கவில்லையே என்ற ஆதங்கத்திலும் அமைதியை குலைக்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டிருக்கிறார்களோ என சந்தேகம் எழுந்துள்ளது.
முற்போக்கு, பகுத்தறிவு, பெண்ணியவாதம் பேசுபவர்கள், இப்பிரச்சினையில், பள்ளி கூடங்களில் எந்த மத அடையாளங்களும் இருக்கக் கூடாது என பேசுவார்கள் என எதிர்பார்த்தேன். வளையல், பூ, பொட்டு அணிந்த வரக் கூடாது என சில கல்வி நிலையங்கள் கட்டுப்பாடு விதித்தபோதும், அதற்காக அபராதம் விதித்தபோதும், கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக நின்ற முற்போக்கு, பெண்ணியவாதிகள் இப்போது, சீருடை விதிகளை பின்பற்றும் கல்வி நிறுவனத்தின் பக்கம் நிற்காமல், ஒரு குறிப்பிட்ட தரப்பின் பக்கம் நிற்கிறார்கள். என்ன நடந்தாலும், பா.ஜ.க.வுக்கு எதிரான நிலை எடுக்க வேண்டும், அதன் மூலம் பா.ஜ.க.வுக்கு எப்படி சிக்கலை உண்டாக்கலாம் என்ற அரசியலைதான் இதிலும் செய்கிறார்கள். பிஞ்சு மனதில்,நஞ்சை விதைக்கிறோம் என்பதும் தெரிந்தும் பா.ஜ.க. எதிர்ப்பு அவர்களின் கண்களை மறைக்கிறது.
ஹிஜாப் சர்ச்சையால் பள்ளிக்கூட மாணவர்கள், இரு தரப்பாக பிரிந்து போராட்டங்களை முன்னெடுப்பது பெரும் கவலை அளிக்கிறது. எனவே, இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர அனைவரும் ஒத்துழைப்போம். கல்வி நிலையங்கள், கல்வி நிலையங்களாக மட்டுமே இருக்கட்டும். சீருடை விதிகளை மதிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.