Skip to main content

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கணித கண்காட்சி. சிறந்த 10 படைப்புகள் தேர்வு

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கணித கண்காட்சி. சிறந்த 10 படைப்புகள் தேர்வு



புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நேற்று 4ந்தேதி ( திங்கட்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை மாவட்;ட கல்வி அலுவலர் எம்.தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் ச.செந்திவேல்முருகன்  கலந்துகொண்டு கண்காட்சிக்கு தலைமை தாங்கி கண்காட்சியினை திறந்து வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களின் சிறந்த படைப்புகளை பாராட்டினார். 

இந்த அறிவியல் கணித கண்காட்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் 63 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 127 படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் சிறந்த படைப்புகளாக அறிவியலில் இராப்பூசல் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த புகைப்பிடித்தலினால் ஏற்படும் தீமைகள் என்ற படைப்பும்,  வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த மூலிகைச்செடிகள் மற்றும் இயற்கை மருத்துவம் என்ற படைப்பும், கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த பயோ நேச்சுரல் பிரிக்ஸ் என்ற படைப்பும், மலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் செய்திருந்த விபத்து பற்றிய அறிவிப்பான் என்ற படைப்பும், இலுப்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் செய்திருந்த மின்காந்த தூண்டல் மூலம் வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்தல் என்ற படைப்பும், குளத்துநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்செய்திருந்த தலைக்கவசம் இன்றி இயங்கா வாகனம் என்ற படைப்பும் ஆக அறிவியலில் 6 சிறந்த படைப்புகளும்,  

கணிதத்தில் புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி செய்திருந்த வடிவியல் மாதிரி என்ற படைப்பும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி செய்திருந்த மாயச்சதுரங்கள் என்ற படைப்பும், வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்திருந்த இயற்கணித மாதிரி படைப்பும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்திருந்த கூட்டு உருவங்கள் என்ற படைப்பும் கணிதத்தில் 4 படைப்புகளும் ஆக மொத்தம் அறிவியல் மற்றும் கணிதத்தில் 10 சிறந்த படைப்புகளை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர். 

அதனைத்தொடர்ந்து சிறந்த படைப்புகளை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த அறிவியல் கணித கண்காட்சியில் புதுக்கோட்டை அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஏ.இராபர்ட்தனராஜ், புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளித்துணை ஆய்வாளர் வி.ஆர். ஜெயராமன் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஏ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். 

அதனைத்தொடர்ந்து நாளை6ந்தேதி(புதன்கிழமை) அன்று புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கணித கண்காட்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 10 சிறந்த அறிவியல் மற்றும் கணித படைப்புகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 9 சிறந்த அறிவியல் மற்றும் கணித படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 

அதாவது நாளை 6ந்தேதி(புதன்கிழமை) அன்று புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டங்களில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 19 சிறந்த அறிவியல் மற்றும் கணித படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இதில் தேர்வுசெய்யப்படும் சிறந்த படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் மற்றும் கணித கண்காட்சிக்கு அனுப்பப்பட உள்ளது.  

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்