வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரிய மாஸ் ரெய்டு நடத்தியுள்ளது மதுவிலக்கு தடுப்பு வேட்டை காவல்துறை.
பிப்ரவரி 6ந் தேதி தொடங்கிய இந்த வேட்டையில் மதுவிலக்கு பிரிவின் 5 டி.எஸ்.பிக்கள், சட்டம் ஒழுங்கு பிரிவின் 3 டி.எஸ்.பிக்கள், 23 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 279 காவல் துணை ஆய்வாளர்கள், காவல்நிலைய காவலர்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்தவர்கள் இந்த ரெய்டில் ஈடுப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் ஜவ்வாதுலை பகுதி, அரவட்டலா மலை, எரிப்பட்டறை மலை, கொரிப்பள்ளம் அடிவாரம் ஆகிய இடங்களில் சாராயம் தடுப்பு வேட்டை நடத்தப்பட்டது. இதில் பிப்ரவரி 6ந்தேதி மட்டும் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3300 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். 800 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர். 343 போலி மதுபான பாட்டில்களை பிடிக்கப்பட்டுள்ளது. 1 மூன்று சக்கரவாகனம், 2 இருசக்கர வாகனம் பறிமுதல், 11 சாராய வியாபாரிகள், உற்பத்தியாளர்களை கைது செய்துள்ளது போலீஸ்.
வேலூர் மாவட்டத்தில் 320 லிட்டர் சாராயமும், 800 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், 34 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்துள்ளனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 லிட்டர் கள்ளச்சாராயமும், 276 மதுபான பாட்டில்களை மட்டும் பிடித்துள்ளது. 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ்.
வேலூர் மாவட்ட போலீஸார் சரியாக ரெய்டு நடத்தவில்லை. திருப்பத்தூரை விட அதிகளவில் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு பகுதிகளில் அதிகளவில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது, ஆந்திரா சாராயமும் இந்த பகுதிகளுக்கு வருகிறது. அப்படியிருக்க அங்கு குறைந்தளவு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது ஆச்சர்யமாக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.