தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் அப்பர் கோயில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இந்தத் தேர் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்ற தேர் ஊர்வலத்தின் போது, மின்சாரக் கம்பிகள் மீது தேர் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள்; 15 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அப்பரின் பிறந்த நாளான சதய நட்சத்திர நாளில் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 94 ஆண்டுகளில் எந்த விபத்தும் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடந்த விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. இது நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சோகம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
தேர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 பேரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளித்து உடல் நலம் பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் இத்தகைய விபத்துகள் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும், உள்ளூர் நிர்வாகமும், விழாக்குழுவினரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.