நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்து பேசியதால் எழுந்த சர்ச்சையை அடுத்து திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி கடந்த மே மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர், இரு நாள்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாக்கியராஜ் அணியை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக ராதாரவி, வியாழக்கிழமை (ஜூன் 13, 2019) சேலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக, என்பது எனக்கு தாய் வீடு போன்றது. மீண்டும் தாய் வீட்டிற்கே திரும்பி விட்டேன். திமுகவில் யாரும் என்னை கைதூக்கி விடவில்லை. அவர்கள் என்னை சுமை தூக்க மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் அதிமுகவில் என்னை அப்படி விட்டுவிட மாட்டார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் எனக்கு நல்ல நண்பர்கள். திமுகவில் இருந்து என்னை நீக்கியதில் எந்த அதிருப்தியும் கிடையாது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது சூழ்நிலைக் கைதியாக உள்ளார். இப்போது அதிமுகவில் இரட்டைத் தலைமை உள்ளதாக பேசி வருகின்றனர். சொல்லப்போனால் திமுகவில்தான் இரட்டைத் தலைமை இருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் தலைவராக இருந்தபோது எந்த ஒரு உறுப்பினரும் நீக்கப்படவில்லை. ஆனால், ஏதேனும் புகாருக்கு உள்ளானவர்கள் அதுகுறித்து விளக்க கடிதமோ, மன்னிப்பு கடிதமோ விஷால் அணியினரிடம் கொடுத்தப் பின்னரும்கூட அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி வருகின்றனர். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலின்போது, புதுக்கோட்டையில் நடிகர் கருணாஸின் செயல்பாடுகள் கேவலமானது. ஸ்டாலினை அவதூறாக பேசிய வைகோவே திமுகவில் சேரவில்லையா? அதிமுகவின் இரட்டைத் தலைமை விவகாரம் குறித்து இப்போது கருத்து கூற விரும்பவில்லை.
படையப்பா படத்தில் ஒரு காட்சியில் ரஜினி, பெண்ணைப் பற்றி பேசுவார். அதுபோல்தான் நானும் மேடையில் பேசினேன். விஷால் அணியின் காலம் பொற்காலம் என்றால், எதற்காக எதிரணி ஒன்று புதிதாக தோன்ற வேண்டும்? இது, சங்கத்தில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. நாடக நடிகர்கள், பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம். மானத்தை விற்க வேண்டாம்.
அரசியலில் பிரச்னை உள்ளதுபோலவே நடிகர் சங்கத்திலும் பிரச்னைகள் உள்ளன. இரண்டு அணியில் இருப்பவர்களும் நல்லவர்கள் என்றால் ஏன் எதிர்த்து வர வேண்டும்? பல்வேறு இடங்களில் ஐசரி கணேஷை மேடையில் ஈட்டியால் குத்துவதைப் போல பேசினார்கள். அதற்குக்காலம் பதில் சொல்லும். நடிகர் சங்கத்தின் வருமானம் குறித்து கணக்கு காட்டாமல் சாப்பிட்டவர்கள் விஷால் அணியினர்.
நடிகர் சங்க வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதி நியாயத்தீர்ப்பு அளிப்பார். நடிகர் சங்க தேர்தலில், சேலம் நாடக நடிகர்கள் பாக்கியராஜ் தலைமையிலான அணியை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.