மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்கயாராக இருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இன்று (ஆகஸ்ட் 31, 2018) கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்மீதான நடவடிக்கைகள் விரைவில் தீவிரப்படுத்தப்படும்.
பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகம், அதன் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருள்களை உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு மாற்றுப் பொருள் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்க அரசு தயாராக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பொறுத்தமட்டில், கேரளா அரசு திட்டமிட்டே உச்சநீதிமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளது. கேரளாவில் வெள்ள அபாயம் ஏற்பட்டதற்கும், முல்லை பெரியாறு அணை நிரம்பியதற்கும் சம்பந்தம் இல்லை. அணை நிரம்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அங்கு கனமழையால் சேதம் ஏற்பட்டு இருந்தது. இந்த அணை விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் நியாயமான கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்து வருகிறோம்.
ஒரே நேரத்தில் மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அதேபோல் வாக்குச்சீட்டு முறை என்றாலும், மின்னணு வாக்குப்பதிவு என்றாலும் எதையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் குறித்த கருத்துருக்கள் தேர்தல் ஆணையத்தை சென்றடையவில்லை என கருதுகிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Published on 31/08/2018 | Edited on 31/08/2018