சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் கிராமப்புற வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஏற்கனவே வீடுகளுக்கு கட்டிய கழிவறைகளை மீண்டும் கட்டியதாக பணம் எடுத்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எண்ணாநகரம் குளம் தூர்வாரும் பணியில் குளத்தில் மண் அள்ளப்பட்டு மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், வடஹரிராஜபுரம் கிராமத்தில் 3-வது வார்டில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு 100 நாள் வேலை வழங்காதது உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து இன்று (ஜூலை 20) ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லையா, முருகன், சிவராமன் நெடுஞ்சேரலாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அமர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் முருகனின் முறைகேடான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.