திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டுவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன், அவர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அக்கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகனுக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷங்களை வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், போக்சோ குற்றவாளி ஜோதிமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் நடந்த மாதர் சங்க ஆர்ப்பாட்டத்தில் கலகம் செய்த தேவேந்திரனை கைது செய்ய வேண்டும். நியாயம் கேட்டுப் போராடிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.