கோவையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கார்த்திகேயனும், சக்தி தமிழினியும் ஜூன் 5- ஆம் தேதி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட நிலையில், ஜூன் 19- ஆம் தேதி, வீட்டிலிருந்த கார்த்திக்கேயனையும், அவருடைய தாயாரையும் தாக்கி, சக்தி தமிழினியை அவரது பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில் அழைத்துச் சென்றனர்.
சக்தியை மீட்டுத்தரக்கோரி, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். வேறு திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி, தனி அறையில் அடைக்கப்படுள்ள தன் மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை உடனே மீட்டுத் தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என, அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை நேற்று (29/06/2020) விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் ஆகியோர், ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் கார்த்திகேயனும், சக்தி தமிழினியும் ஆஜராக உத்தரவிட்டனர். இருவருக்கும் இ-பாஸ் வழங்க வேண்டும் என்றும், தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இருவரும் ஆஜராகும்போது வேறு யாருடைய தலையீடும் இல்லாமல், இருவரிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தி, கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.