தலைவாசல் அருகே, எம்.எல்.ஏவின் மகனை வரன் பேசி முடித்துக் கொடுப்பதாகக் கூறி, விவசாயியிடம் 20 லட்சம் ரூபாய் சுருட்டிய கல்யாண தரகரை, பெண் வீட்டார் காரில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவர், தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வரன் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்காக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கைகளத்தூரைச் சேர்ந்த முருகன் மகன் செல்லமுத்து (42) என்பவரை அணுகியுள்ளார். அவரும் பல இடங்களில் வரன் பார்த்துள்ளார். இந்நிலையில், எம்.எல்.ஏ ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ஆறுமுகம், தரகர் செல்லமுத்து கேட்டபோதெல்லாம் சிறுகச் சிறுக என 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஏப். 24ம் தேதியன்று செல்லமுத்து தலைவாசலுக்குச் சென்றுவிட்டு வருவதாக தனது மனைவி தெய்வானையிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இரவு 7 மணியளவில், ஆத்தூர் புளியங்குறிச்சி பகுதியில் டாஸ்மாக் கடை அருகே நண்பர் ராமருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு காரில் வந்த 6 பேர் கும்பல், திடீரென்று செல்லமுத்துவை சரமாரியாக தாக்கியதோடு, அவரை காரில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து ராமர், செல்லமுத்துவின் மனைவிக்கு தகவல் அளித்தார். இதையடுத்து செல்லமுத்து மனைவி வீரகனூர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு, தனது கணவரை சிலர் கடத்திச்சென்று விட்டதாக கூறினார். அதன்பேரில், காவல்துறையினர் செல்லமுத்துவை தேடினர். இதற்கிடையே, கைகளத்தூர் பகுதியில் மர்ம கும்பல் அவரை இறக்கிவிட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. செல்லமுத்துவை கை, கால்களை கட்டிப்போட்டு, காருக்குள் அடைத்து வைத்து விடிய விடிய சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த செல்லமுத்துவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், ஆறுமுகம் மகன் மருதமுத்து (27), அவருடைய கூட்டாளிகளான கெங்கவல்லியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் கருப்பையா, ஆணையம்பட்டி ராமர், வலசக்கல்பட்டி வசந்தபுரத்தை சேர்ந்த முருகேசன், புனல்வாசலைச் சேர்ந்த தாமரைச்செல்வன், பாண்டியன் ஆகியோர் கடத்திச்சென்று தாக்கியது தெரிய வந்தது. அவர்கள் மீது கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஏப். 25ம் தேதி மாலை மருதமுத்துவை காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், கல்யாண தரகர் செல்லமுத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
ஆறுமுகத்தின் மகளுக்கு செல்லமுத்து வரன் பார்த்து வந்துள்ளார். அவரிடம் உங்கள் மகள் எம்எஸ்சி பிஎட் படித்துள்ளார். அவருக்கு ஆசிரியர் வேலை ஏற்பாடு செய்து விட்டால், தனக்குத் தெரிந்த எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடலாம் என கூறியுள்ளார். எம்எல்ஏ மகனை திருமணம் செய்து கொடுப்பதாகக் கூறி, முதலில் 10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பின்னர் சில தவணைகளில் மேலும் பணம் பெற்றுள்ளார். இது ஒருபுறம் இருக்க, ஆறுமுகத்தின் மகளுக்கு சில தோஷங்கள் இருக்கிறது என்றும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறியும் மேலும் சில லட்சங்களை கறந்துள்ளார். இப்படி ஆறுமுகத்திடம் இருந்து பல தவணைகளில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் வரை செல்லமுத்து வசூலித்துள்ளார்.
ஆனாலும், எம்.எல்.ஏ மகன் மட்டுமின்றி உருப்படியாக ஒரு வரன் கூட பார்த்துக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆறுமுகம் குடும்பத்தினர் தங்களிடம் இருந்து ஏமாற்றிப் பறித்துக்கொண்ட பணத்தை திரும்பக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். அத்துடன் நில்லாமல் ஆறுமுகம், தரகர் செல்லமுத்து மீது கைகளத்தூர் காவல்நிலையத்தில் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். அவருடைய சொந்த ஊரான தலைவாசல் காவல்நிலையத்திலும் செல்லமுத்து மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் அழைத்தும் செல்லமுத்து விசாரணைக்கு வராமல் போக்குக் காட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் சம்பவத்தன்று செல்லமுத்து, வீரகனூர் அருகே வேப்பம்பூண்டியில் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஆறுமுகத்தின் மகனும், கூட்டாளிகளும் அவரை காரில் கடத்திச்சென்று, தங்களிடம் இருந்து வாங்கிய 20 லட்சம் ரூபாயைக் கேட்டு விடிய விடிய தாக்கியுள்ள தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மருதமுத்துவை கைது செய்த காவல்துறையினர் அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவரை ஆத்தூர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசிக கட்சி நிர்வாகி கருப்பையா உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.