சென்னை மெரினா கடற்கரை நவம்பர் முதல் திறக்கப்படும் என நம்புவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நேரில் ஆஜரானார்கள். அப்போது நீதிபதிகள், ஆங்கில நாளிதழில் வந்த செய்தியைச் சுட்டிக்காட்டி, மெரினா கடற்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர், சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் உயர்மட்டக் குழு முடிவு எடுக்க வேண்டும் என்றும், வருகிற நவம்பர் மாதம் முதல் திறக்கப்படுவற்கான வாய்ப்பு உள்ளதாக, தான் நம்புவதாகத் தெரிவித்தார். விழாக் காலம் தொடங்கிவிட்டது என்றும், மற்ற கடைகள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார். ஆனால், மெரினாவில் திறக்க வேண்டும் என்று, தான் நிர்பந்திக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோர் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அதில் பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிட்டனர். மெரினா கடற்கரை சிறந்த கடற்கரை பட்டியலில் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து வழக்கு விசாரணையை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்துவது, அழகுபடுத்துவது, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்டவை குறித்த அறிக்கைகளை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.