Skip to main content

அ.தி.மு.க.விற்கு வெட்கமில்லாமல் துணை போகும் தேர்தல் அதிகாரிகள்: ஸ்டாலின் கண்டனம்

Published on 28/03/2018 | Edited on 28/03/2018


 

mkstalin


கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு; அ.தி.மு.க.விற்கு வெட்கமில்லாமல் துணை போகும் தேர்தல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ஏதோ “இடைத்தேர்தல்களையும்” “உள்ளாட்சித் தேர்தல்களையும்” நடத்தும் ஜனநாயகத்திற்கு எதிரான அராஜக பாணியில் அதிமுக அரசு நடத்துவதற்கும், அதற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் விரும்பித் துணை போவதற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  நிர்வாகத்தின் இமாலயத் தோல்வியிலும், ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுகவினர் கூட்டுறவு இயக்கத்தையே சீரழித்து அதன் அடிப்படை நோக்கத்தையே பாழடித்துவிட்ட நிலையில்,கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் வாக்குகளைப் பெற முடியாது என்பதால், குறுக்கு வழியில் ,வேட்பு மனு தாக்கலின் போதே கூட்டுறவு சங்கத் தேர்தல் அதிகாரிகளாக இருப்பவர்கள், ஆளுங்கட்சியினர் தூண்டுதலினால், பகிரங்கமாக ஈடுபட்டுள்ள ஜனநாயக விரோத தேர்தல் நடைமுறைகள் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
 

மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் 8.2.2018 அன்று தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள கையேட்டில் “கூட்டுறவு சங்கத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டும்” என்று வெளிப்படையாக அறிவிப்பு ஒன்றை ஒப்புக்கு வெளியிட்டு விட்டு, மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக நடைபெறுகின்ற கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தி.மு.க.வினர் உள்ளிட்ட எதிர்கட்சியினரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதும், ஏற்றுக் கொண்டதற்கு ஒப்புகை ரசீது கொடுக்காமல் ஓடி ஓளிவதும், ஒருதலைப்பட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்புகளை ஒட்டி விட்டு கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் தலைமறைவாகி விடுவதும் அதிமுக அரசின் “கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடத்தும்” லட்சணமாக மாறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தேர்தல் அதிகாரிகளை வழிநடத்த வேண்டிய மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அதிமுக அரசுக்கும், அதிமுகவினரை ஜனநாயகத்திற்கு முற்றிலும் முரணாகத் தேர்ந்தெடுப்பதற்கும் நாணமின்றித் துணை போவது “சுதந்திரமான தேர்தல்” என்ற உச்சநீதிமன்றத்த்தின் பல முக்கிய தீர்ப்புகளை அப்பட்டமாக மீறும் விதமாக அமைந்திருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்களோ கண் மூடி கை கட்டி வாய்பொத்தி நிற்க, உள்ளூரில் உள்ள காவல்துறை அதிகாரிகளோ அதிமுகவினருடன் கைகோர்த்து தேர்தல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற செய்தி தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்களிடமிருந்து தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. “நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்த வேண்டும்” என்று அறிவித்த மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் அதிமுகவினரின் அத்துமீறல்களையும், தேர்தல் அராஜகங்களையும் கண்டும் காணாததுபோலக் கண்சிமிட்டிக்கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தேர்தல் நடக்கும் இடங்களுக்கு தேர்தல் அதிகாரிகளே வராமல் “தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின்” பட்டியல் கடலூர் போன்ற மாவட்டங்களில் ஒட்டப்பட்டு, “தேர்தல் அதிகாரிகளைக் காணவில்லை” என்று கழக மாவட்டச் செயலாளரின்  சார்பில் காவல்துறையில் புகார் மனுவே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி கொடுக்கப்பட்ட புகார்களின் மீதும், அதிமுகவினரின் அராஜக ஆட்டபாட்டங்கள் குறித்துக் கொடுக்கப்பட்ட புகார்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த “முன் அறிவிப்பு” தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்டும், மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு “கூட்டுறவு சங்கத் தேர்தலில் சுதந்திரமான தேர்தல் நடைபெற பாதுகாப்பு கொடுங்கள்” என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் கட்டளையாவது பிறப்பித்திருக்கிறாரா என்பதே யாருக்கும் தெரியவில்லை. ஆகவே காவல்துறையும், கூட்டுறவு தேர்தல் ஆணையமும் தோள்மேல் கைபாட்டுக் கொண்டு அதிமுகவினரின் தேர்தல் முறைகேடுகளுக்கும் சட்ட துஷ்பிரயோகங்களுக்கும் துணை போவதற்கு எதிர்காலத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை நிச்சயம் வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
 

ஆகவே தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையரும், தமிழ்நாடு காவல்துறை தலைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டரீதியாக உரிய உத்தரவு பிறப்பித்து கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதிமுகவிற்கு வெட்கமில்லாமல் துணை போகும் தேர்தல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூட்டுறவு சங்கத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள “தேர்தல் அதிகாரிகளுக்கான கையேடு” அடிப்படையில் தேர்தலை சுதந்திரமாக நடத்திட ஆணை பிறப்பிக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்