Skip to main content

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்! - சேலம் போலீஸ் கமிஷனர் 

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
h

 

இந்திய மோட்டார் வாகனச்சட்டப்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, அவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் அணிய வேண்டும். இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக்கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்பு இரு நாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், ''ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் போதாது. அதை முறையாக அமல்படுத்த வேண்டும். மோட்டார் சைக்கிளில் பின்பக்கம் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? அதைப்பற்றி ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை?,'' என்று அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார்.


அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறினார்.


இதற்கிடையே, தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கும் இன்று (ஆகஸ்ட் 24, 2018) ஓர் சுற்றரிக்கை அனுப்பியுள்ளார். அதில், இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெரும்பாலான சாலை விபத்துகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை பயணி ஆகியோர் ஹெல்மெட் அணியாததால் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பை சந்திக்கின்றனர்.


இதனை தவிர்க்கும் வகையில், சேலம் மாநகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னிருக்கையில் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்