Skip to main content

நமது கண்டனக் குரல் இந்தியா எங்கும் எதிரொலிக்கட்டும்! கி.வீரமணி அறிக்கை

Published on 09/04/2018 | Edited on 09/04/2018
K. Veeramani Dravidar Kazhagam



காவிரி உரிமையில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி சென்னை வரும் நிலையில், அவருக்கு ஒட்டுமொத்தமான தமிழர்களின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், ஒருமுகமாக தமிழர்கள் எழுந்து கருப்புக்கொடி காட்டிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், கருநாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஸ்கீம் என்ற வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில், திட்டமிட்டு மத்திய பி.ஜே.பி. அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசும் துணைபோய்க் கொண்டிருக்கிறது.
 

தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகக் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை மதித்து, தம்மைச் சந்திக்கக்கூட தேதி தராத பிரதமர் நரேந்திர மோடி, வரும் 12 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார்.

 

Narendra-Modi


 

பிரதமருக்குக் கருப்புக்கொடி காட்ட தக்க தருணம் இது!
 

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வைக் காட்டவேண்டிய சரியான தருணம் இது! இதற்குமுன்பே கூட தமிழ்நாட்டின் உரிமை, தன்மான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பல பிரதமர்களுக்குக் கருப்புக்கொடி காட்டிய மண் தமிழ்நாடு!
 

அதே காரணமும் - அவசியமும் இப்பொழுதும் நமக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 1.4.2018 அன்று தி.மு.க. சார்பில் சென்னையில் கூட்டப் பெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில், காவிரி உரிமை மீட்பை முன்னிறுத்தி, தமிழகம் வரும் பிரதமருக்குக் கருப்புக்கொடி காட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதனைச் செயல்படுத்தும் வகையில், வரும் 12 ஆம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழினப் பெருமக்கள், கட்சி வண்ணங்களைக் கடந்து ஒரே அணியாக, ஒரே முகத்தில், ஒரே குரலாக தமிழர்களிடையே சுருதிப் பேதமின்றி நாம் நமது எதிர்ப்பினைப் பதிவு செய்யத் தயாராவோம், தயாராவோம்!
 

நமது கண்டனக்குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கட்டும்!
 

நாம் கொடுக்க இருக்கும் உரிமைக் குரல் இந்தியா எங்கும் எட்டவேண்டும் - எதிரொலிக்கவும் வேண்டும்! பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும் 12 ஆம் தேதியன்று நமது கண்டனத்தைப் பறைசாற்றும் வகையில், தமிழர் வீடுகளில் எல்லாம் கருப்புக்கொடி பறக்கட்டும்! பறக்கட்டும்!! தமிழர்கள் அனைவரும் கருப்புச் சட்டையோ அல்லது குறைந்தபட்சம் கருப்புச் சின்னம் (பேட்ஜ்) அணிந்தோ தமிழர்களின் மனக்குமுறலை - கண்டனத்தை -  எழுச்சியுடன் வெளிப்படுத்துவோம்!
 

அதேநேரத்தில், அமைதிக்கோ, பொதுச் சொத்துக்கோ எவ்விதப் பங்கமும் ஏற்படாமல், நமது ஒரே நோக்கமான காவிரி உரிமை மீட்பின் அடையாளமாக நாம் காட்டும் எதிர்ப்பு - கண்டன உணர்வு - பெரிய அளவில் கணீர் என்று ஒலிக்கும் வண்ணம், பளிச்சென்று தெரியும் வண்ணம் நமது உரிமைக் குரலை - கருப்புச் சட்டையுடன் - கருப்புச் சின்னத்துடன் - கருப்புக் கொடியுடன் மண்ணும் விண்ணும் அதிர ஒலித்திடுவோம்! ஒலித்திடுவோம்!! காட்டிடுவோம்! காட்டிடுவோம்!!
 

தயாராவீர்! தயாராவீர்!! 
 

இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்