மந்திரத்தால் அதைச் செய்கிறேன்; இதைச் செய்கிறேன் என்று ஆசை காட்டி ஏடாகூட நள்ளிரவு பூஜைகளை நடத்தி வந்ததோடு அப்பாவிகளின் நகை, பணம் ஆகியவற்றையும் மோசடி செய்திருக்கிறார் ஒரு போலி மந்திரவாதி. அவரது லீலைகளைக் கேட்டு காவல்துறையினரே திகிலடைந்து போயிருக்கிறார்கள்.
அந்த போலி மந்திரவாதியின் பெயர் சந்திரகுமார். நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம், மருதூர் வடக்கைச் சேர்ந்தவர். இவர் ’வலம்புரி முத்தாரம்மன் காலசக்கரம்’ என்ற யூடியூப் சேனல் மூலமாக, மந்திர மாயக் கட்டுக் கதைகளை விளம்பரம் மூலம் அள்ளிவிட்டிருக்கிறார். வசிய மை செய்வது தொடங்கி, அனைத்து குடும்பப் பிரச்சனைகளையும் மந்திரத்தால் உடனடியாகத் தீர்ப்பதாக விளம்பரங்களின் மூலம் அவர் தூண்டில் போட, பலரும் அதில் சிக்கி இருக்கிறார்கள். அப்படி தன்னிடம் சிக்கியவர்களிடம் தன் மன்மத வித்தைகளையும் அரங்கேற்றியிருக்கிறார் சந்திரகுமார்.
நம்மிடம் பேசிய ஒரு பெண்மணி, “இவருடைய யூடியூப் சேனல் விளம்பரத்தைப் பார்த்து பெண்கள்தான் அதிகம் வலையில் விழுகிறார்கள். தன்னை நம்பி வருகிறவர்களிடம் என்ன பிரச்சனை என அவர்களிடமே விசாரித்துத் தெரிந்துகொள்ளும் சந்திரகுமார்., ஏதேனும் ஒரு புல் பெயரை நினைத்துக் கொள்ளச் சொல்வார். எல்லோரும் புல் என்றால் அறுகம்புல் என்றுதான் சொல்வார்கள். உடனே நீங்கள் நினைத்தது அறுகம்புல்தானே என்று சொல்லி அவர்களை ஆச்சரியப்படுத்துவார்.
பிறகு, அறுகம்புல் விநாயகருக்கு உகந்தது. நீங்கள் விநாயகரை நினைத்துப் பரிகாரம் செய்தால், உங்களின் மீதான பிணி பீடை நீங்கும் என்பார். அதே போல பூ பெயரையும் கேட்பார். அப்படியே அதை இவர் மாற்றிச் சொன்னாலும் தன் பேச்சுத் திறமையால் அவர்களைத் திசைமாற்றிவிடுவார். சிலரிடம் வேறு ஒருவரோடு உன் புருசனுக்குத் தொடர்பு இருக்கு என்று சொல்லி, அவர்கள் குடும்பத்திலும் பிரச்சனையை உண்டாக்கி இதனால் பிரிந்துபோகும் பெண்களுக்கும் இவர் வலை விரிப்பார். சேனல் வழியாகத் தொடர்புகொள்ளும் பெண்களிடம் அவர்களின் போட்டோவை அனுப்பச் சொல்வார். அந்த பெண்கள் அழகாக இருந்தால் நேரில் சந்தித்தால்தான் முழுப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என அவர்களின் வீட்டிற்கே சென்று அவர்களிடம் தந்திரமாகப் பேசி தவறான முறையிலும் நடக்க முயல்வார்.
அவரை நம்பிவிட்டார்கள் என்றால் நள்ளிரவில் நிர்வாண பூசை செய்யணும் என்று படிய வைப்பார். அப்படி பூசை நடக்கும்போது தீர்த்தமாக முதலில் மதுபானத்தைக் கொடுத்து குடிக்க வைப்பார். தானும் குடிப்பார். பிறகு, பெண்களை நிர்வாணமாக இருக்க வைத்து... பூக்களை மேலே தூவி... பூஜை என்ற பெயரில், தான் நினைத்ததை சாதித்துக் கொள்வார். அவரது இந்த மன்மத வலையில் சிக்கியவர்களிடம் இருந்து நகைகளையும், பணத்தையும் பறிக்க ஆரம்பித்துவிடுவார். இவரிடம் சிக்கிய பெண்களில் பலர், அவமானத்துக்கு பயந்து வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்'’ என்று அதிர வைத்தார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சுதா என்பவர் கணவனை இழந்தவர். ஒரு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் அவர், “தன்னிடம் பஞ்சாயத்துத் தலைவர் எப்போது பார்த்தாலும் கோபமாகவே பேசுகிறார். அதனால் அவரை வசியம் செய்து கோபமின்றிப் பேச வைக்க வேண்டும் என்று இந்த சந்திரகுமாரைத் தொடர்புகொண்டிருக்கிறார். சுதாவிடம் அதிக வசதி இருப்பதை அறிந்த சந்திரகுமார். அவரிடம் பேசிப் பேசியே தனக்கு அபரிமிதமான சக்தி இருப்பதாக நம்ப வைத்து ஏமாற்றி அவரிடமிருந்த அனைத்தையும் கறந்துவிட்டாராம்.
அதேபோல கோயம்புத்தூரைச் சேர்ந்த அன்புச்செல்வி என்பவர் குடும்பப் பிரச்சனைக்காக சந்திரகுமாரிடம் வந்துள்ளார். அப்போது மாந்திரீகம் என்ற பெயரில் ஏதேதோ சொல்லி, பணத்தைப் பறித்துள்ளார். பாதியிலேயே சுதாரித்துக்கொண்ட அவர், அந்த போலி மந்திரவாதியிடம் இருந்து தப்பிவிட்டார். அடுத்து, கலப்புத் திருமணம் செய்த தென்காசி மாரியம்மாள் என்பவர் இவரிடம் வந்திருக்கிறார். அவர் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்த நிலையில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கான கோட்டாவில் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டி அவரிடம் இருந்தும் ரூபாய் 6 லட்சம் வரை பணத்தை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார் சந்திரகுமார்.
இதுபோல் நாகப்பட்டினம், திருச்சி, சேலம், மதுரை என அனைத்து இடங்களிலும் அவர் புகுந்து விளையாட, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான நிர்மலா நம்மிடம், “நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த சந்திரகுமார், யூடியூப் மூலமாக மாந்திரீகம் செய்வதாக விளம்பரம் செய்தார். என்னுடைய பக்கத்து வீட்டுப் பெண்களை அவன் நம்ப வைக்க அவர்கள் மூலம் அவனைப் பற்றி அறிந்து அவரிடம் பேசினேன். எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும் என்று ஆசை காட்டிய அவர், மந்திரம் மாயம் என்று கூறி பணத்தைப் பறித்தார். பிறகு மூளைச்சலவை செய்து என்னை நள்ளிரவு பூசைக்கு சம்மதிக்க வைத்தார். பூசையின் போது எல்லை மீறினார். நான் அழுதபோது, திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். என்னிடம் இருந்து 20 பவுன் நகையையும் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டார். இது பற்றிக் கேட்டபோது, என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எங்கே வேண்டுமானாலும் போய் புகார் பண்ணிக்க என்று மிரட்டினார்.
அமைச்சர்களுக்கே வசிய மருந்து செய்து தருகிறவன் நான் என்றும் மார்தட்டிக்கொண்டார். அதனால் வேறு வழியில்லாமல் பாதிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தோம். எங்களை விசாரித்த அதிகாரியே அவன் லீலைகளைக் கேட்டு ஷாக் ஆனார். திருச்சி ஐ.ஜி.யை உடனடியாகப் பார்க்கச் சொல்லியிருக்கிறார். அந்த மோசடி சாமியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'’ என்று கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திரகுமார், பகலில் பக்தி மயமாகத் தோன்றுவதோடு மாலை 6 மணிக்கு மேல் குடியும் மஜாவுமாக இருப்பார் என்கிறார்கள். எப்போது பார்த்தாலும் பெண்களிடம் ஏதாவது போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் எல்லாம் இருந்தாலும் அவர்கள் யாரும் இவரது லீலைகளைக் கண்டுகொள்வது இல்லையாம். இப்படிப்பட்ட புகார்கள் குறித்து விளக்கம் பெற, சந்திரகுமாரைத் தொடர்புகொண்ட போது அவரது மூன்று எண்களும் துண்டிக்கப்பட்டு இருந்தது. போலீசுக்கு பயந்து செல்போன்களை ஆஃப் செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார் என்கிறார்கள்.
மாந்திரீகத்தின் பெயரால் நகை, பணம் ஆகியவற்றோடு பெண்களையும் வேட்டையாடிய போலி மந்திரவாதி சந்திரகுமாரை காவல்துறை விரைந்து மடக்கவேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.