திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கண்மணி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 37 வயதாகும் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கண்மணி தையல் வேலை செய்து வந்தார். இவருடைய மூத்த மகன் அந்தப் பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். 17 வயதுடைய இரண்டாவது மகன் திருப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி காலை வீட்டுக்கு வந்த கண்மணியின் மூத்த மகன், வீட்டில் தனது தாய் இறந்து கிடந்ததை பார்த்தும் கடும் அதிர்ச்சி அடைந்து கதறினார். தனது தம்பிக்கு செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அந்த செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.
மூத்த மகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். பெருமாநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கண்மணியின் இளையமகன் கிராம நிர்வாக அதிகாரியிடம் தனது தாயை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். அவர் அந்த மாணவனை பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை செய்தனர்.
''சம்பவத்தன்று 2ஆம் தேதி இரவு அண்ணன் வீட்டில் இல்லை. சேவூர் சென்று விட்டார். நானும் அம்மாவும்தான் இருந்தோம். ஈரோட்டில் உள்ள கல்லூரில் 3ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை காதலிப்பதால், அவரை பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அதற்கு நீ சம்மதிக்ணும் என கூறினேன்.
அதற்கு அம்மா, உன்னைவிட அந்த பொண்ணுக்கு வயசு கூட, இதெல்லாம் ஒத்துவராது என கூறியதால் எனக்கு ஆத்திரம் வந்தது. நான் அம்மாவுடன் சண்டைப்போட்டு திட்டினேன். அம்மாவும் என்னை திட்டி பேசிச்சு. உன்னைவிட மூத்த பொண்ணுடா, படிக்கிற வேலைய பாரு, படிக்க அனுப்புனா பொண்ணு பின்னாடி சுத்துரியான்னு கேட்டுச்சி.
அதுக்கு நான், நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாய் என கூறி அம்மாவை தாக்கி, வீட்டில் இருந்த கயிற்றால் அம்மாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பயத்தில் என்ன செய்யறதுன்னு தெரியல. வீட்டைவிட்டு ஓடிப்போய் கோவிலில் உட்கார்ந்திருந்தேன். இரவு முழுவதும் அங்கேயே மறைந்திருந்தேன்.
கோயிலுக்கு வெளியே நடந்து சென்றவர்கள், எங்க அம்மா இறந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். பயம் அதிகமானது. அதனால என்ன செய்வதன்று தெரியாமல் விஏஓவிடம் நடந்ததை சொன்னேன்'' என்று போலீசார் விசாரணையில் இளைய மகன் கூறியுள்ளார்.
கண்மணியின் இளையமகன் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். வயது 17 என்பதால் அந்த மாணவனை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.