பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையை கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், 'இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும்' என தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக வீசிய பலத்த காற்று காரணமாக சென்னையில் 60 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தாம்பரம் மாநகராட்சியில் மட்டும் 26 மரங்கள் சாய்ந்துள்ளதாக ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் விழுந்த மரங்கள் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 68 மரங்கள், 5 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், 3 படகுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு கால்நடைகள் இறந்த நிலையில், 10 குடிசைகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது.