எட்டு வழிச் சாலைக்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து மன்சூர் அலிகான் வெள்ளிக்கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-
8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனக்காக சட்டமன்றத்தில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 40 சதவீத கமிஷனுக்காகவே இந்த 8 வழிச்சாலையை அமைக்கிறார்கள். 8 வழிச்சாலையால் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கிறேன் என்றோ அல்லது எத்தகைய பசுமை புரட்சியை ஏற்படுத்த போகிறோம் என்றோ எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும்போதும் 4-வது சாலை எதற்காக அமைக்கிறார்கள்?. நான் கைது செய்யப்பட்ட அன்று, காலையில் ரத்ததானம் செய்யலாம் என புறப்பட்டேன். ஆனால், அன்றைய தினம் ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து என்னை கைது செய்தார்கள். வைரமுத்து தலையை வெட்டி கொண்டு வாருங்கள் எனக் கூறியவர்களை எல்லாம் கைது செய்யவில்லை. மன்சூர் அலிகான் இளிச்சவாயன் என்பதால் கைது செய்து விட்டார்கள்.
இந்த ஜனநாயக நாட்டில் கருத்துரிமை, பேச்சுரிமை இல்லாமல் போகிறது. நியாயத்தை பேசினால் வாய்ப்பூட்டு போட்டு கைது செய்கிறார்கள். பச்சை பச்சையாக பேசுபவர்களை எல்லாம் கைது செய்யாமல் சுதந்திரமாக சுற்ற விட்டிருக்கிறார்கள். இவ்வாறு கூறினார்.