Skip to main content

மாஞ்சோலை விவகாரம்; புலிகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக வனத்துறைக்குக் கடிதம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Manjolai Affair Tiger Conservation Commission letter to Tamil Nadu Forest Dept

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் குத்தகை 2028 ஆம் ஆண்டில் முடிவடைகிறது. மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய நலனுக்காக விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என இதற்கான அறிவிப்பை தனியார் நிறுவனம் நோட்டீஸ் வாயிலாக வெளியிட்டது. மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

அதே சமயம் மாஞ்சோலை மக்களை அங்கிருந்து வற்புறுத்தி வெளியேற்றுவதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக வனத்துறையிடம் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வனப்பாதுகாவலருக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலமூக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி கிராமங்களில் உள்ள பாரம்பரிய பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது தொடர்பாக கிருஷ்ணசாமியின் கடிதம் வரப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த உண்மை நிலை மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை விரைவில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாஞ்சோலை விவகாரம்; ‘மனிதத் தன்மையோடு அணுக வேண்டும்” - நீதிமன்றம் 

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Court Court The Manjolai Affair

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவு காடுகளில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தங்கி அங்கு பணியாற்றி வந்தனர். குத்தகை முடிவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய பணியை நிறுத்திக் கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.

மேலும், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் அந்தத் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு முன்னதாக தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 

இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனியார் நிறுவனம் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், ‘நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும்வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இன்று இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாலர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும். தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை செய்ய அரசின் டான்டீ (TAN TEA) நிர்வாகம் முன்வர வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான்டீ நிர்வாகம் ஏற்று நடத்த முன்வர வேண்டும். இந்த விவாகரத்தை தமிழக அரசு மனிதத் தன்மையோடு அணுக வேண்டும்” எனக் கருத்து தெரிவிக்கப்பட்டது. 

Next Story

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Chief Minister MKStalin letter to MPs and MLAs

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோன்று அன்றையதினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளனர். இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் தன்னால் 18.12.2023 அன்று தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்மூலம் மொத்தம் 8.74 இலட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்திடத் திட்டமிட்டு வருகிற 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் தான் அதனைத் தொடங்கி வைக்க உள்ளேன்., அன்றையதினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். 

Chief Minister MKStalin letter to MPs and MLAs

மக்களின் தேவைகளை நன்குணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் 11.07.2024 அன்று நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்திட வேண்டும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பொது மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 14 லட்சத்து 40 ஆயிரத்து 351 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.

அதேபோன்று, பல்வேறு ஆய்வுகளின் மூலமும் தமிழ்நாடு மாநில திட்டக் குழு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மதிப்பீடு செய்ததன் அடிப்படையிலும். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ளது. அதோடு சத்தான உணவினை வழங்குவதன் காரணமாகப் பள்ளிகளில் மாணாக்கர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள், காலை உணவு தயாரிக்கும் நேரம் மற்றும் பொருட்செலவு மீதமாவதோடு மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் படிப்புத்திறன் அதிகரித்துள்ளதைக் கண்டு பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருவதாகத் திட்டக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

Chief Minister MKStalin letter to MPs and MLAs

இந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும் கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம் என்ற தமது அரசின் உன்னத நோக்கத்தை எய்திடும் வகையில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையொட்டி கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளான 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில், தான் அதனைத் தொடங்கி வைக்க உள்ளேன். அன்றையதினம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட ஊரகப் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 11-7-2024 அன்று விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும் மேலும் 15-7-2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ள இந்த திட்டங்களின் விரிவாக்க நிகழ்ச்சிகள் தொடர்பாக உரிய அறிவுரைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்நிகழ்வுகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் ஆதரவினை வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.