மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!
சென்னையில் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ என்பவர் உயிர் இழந்த துயர சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. பேனர் வைப்பு குறித்து வந்த நீதிமன்ற உத்தரவுகளை யாருமே மதிக்கவில்லை. அதன் விளைவு, வாழ வேண்டிய ஒரு இளம் உயிர் பறி போயிருக்கிறது. இதன் விளைவாக இன்று பல அரசியல் கட்சிகள் பேனர்கள், கட்- அவுட்டுகளை இனி வைக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்புக்குரியது.
கடந்த பல ஆண்டுகளாக, பகட்டு அரசியலின் பரிணாம வளர்ச்சியாகவே இக்கலாச்சாரம் தமிழகத்தில் வளர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இது எல்லை மீறியது. ஆனாலும், யாரும் இதை கண்டுக்கொள்ளவில்லை. பல முக்கிய அரசியல் கட்சிகளை பார்த்து, வளரும் கட்சிகளும் அதை நோக்கி தள்ளப்பட்டன. ஒரு துயர மரணத்தின் விளைவாக இந்த ஆடம்பர அரசியல் கலாச்சாரம் இப்போது முற்றுக்கு வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
மனிதநேய ஜனநாயக கட்சி கட்- அவுட் கலாச்சாரத்தை எப்போதும் ஏற்றதில்லை. அந்த வகையில் பேனர் கலாச்சாரம் இப்போது விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளாகியிருப்பதை வரவேற்கிறோம். எனவே ,பொது இடங்களில் இனி பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கட்சியினரை வலியுறுத்துவதோடு,இதை உறுதியாக செயல்படுத்துமாறு கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் கேட்டுக் கொள்கிறோம்.