Skip to main content

மணிப்பூர் கொடூரம்; தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று போராட்டம்

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Manipur issue Congress across Tamil Nadu today

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது.

 

இதுமட்டுமின்றி மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து குக்கி சமூகத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில், “மணிப்பூர் வன்முறையில் குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். இம்பாலில் கடந்த  மே மாதம் 4 ஆம் தேதி குக்கி இனத்தைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளனர்” என்று அதிர்ச்சி தகவலைத் தெரிவித்து இருந்தனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளனர்.

 

முன்னதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தனது டிவிட்டர் பதிவில், “மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் ஜூலை 26 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்