Skip to main content

மணிப்பூர் விவகாரம்; திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Manipur incident DMK women team campaign announcement

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் ஆடைகள் களையப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று மனிதாபிமானமற்ற முறையில்  பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. இது அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

 

இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய  பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்.

 

இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து வரும்  23 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் தொடர்ச்சியாக 24 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்