Skip to main content

மணிப்பூர் கொடூரம்; ஒன்று கூடிய சமூக செயற்பாட்டாளர்கள்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் 3 மாதங்களைக் கடந்து நடைபெற்று வரும் கலவரங்கள் சர்வதேச அளவில் கண்டங்களைப் பெற்று வருகிறது.

 

இதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்காமல் மெளனம் காப்பதும் கடும் அதிருப்தியை நாடு முழுக்க உருவாக்கி உள்ளது. மணிப்பூர் மாநில பாஜக அரசு இதில் அரசியல் லாபம் அடையும் நோக்கோடு, கலவரங்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை உடனடியாக அமைதி வழியில் நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனச் சமூக செயல்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.

 

மாலை 4 மணி அளவில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் சமூக ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். மாலை 6 மணிக்கு சென்னை - மெரினா காந்தி சிலை அருகில் பதாகை ஏந்தி 10 நிமிடங்கள் அமைதியாக ஒன்று கூடுவது என முடிவு செய்யப்பட்டது.

 

களத்துக்கு வந்த தருணத்தில் அங்கு மெட்ரோ பணிகள் நடப்பதால், மெரினாவில் ஒளவையார் சிலை அருகே கூடுவது என முடிவானது. முதல் கட்ட எதிர்ப்பை - கண்டனத்தைத்  தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வெளிப்படுத்த வேண்டும் என முடிவாகி, இரண்டு மணி நேரத்தில் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பலரும் ஒன்று கூடினர். 'மணிப்பூரில் இழிவுபடுத்தப்பட்டது பெண்கள் மட்டுமல்ல; நமது நாடும், கௌரவமும்’ என்ற பதாகையைப் பலரும் கையில் ஏந்தியிருந்தனர்.

 

'மணிப்பூர் பெண்கள்  மீதான வன்முறையைக் கண்டிக்கிறோம். மோடி அரசே நடவடிக்கை எடு' என்ற பேனரும் பிடிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் அலைப்பேசி விளக்குகளை ஒளிரவிட்டு அமைதி வழியில் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். குறுகிய நேரத்தில் பரபரப்பான சென்னையில் சமூக செயல்பாட்டாளர்கள் உணர்வோடு ஒன்று கூடியது குறிப்பிடத்தக்கது.

 

நிறைவாக மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் தவசி குமரன் (திராவிடர் விடுதலைக் கழகம்) சுந்தரவள்ளி, கௌஸ் (சமூக செயல்பாட்டாளர்களுக்கான கூட்டமைப்பு), ஜலீல் (ஜல்லிக்கட்டு போராட்டக் குழு), செள. சுந்தரமூர்த்தி (தமிழர் விடுதலைக் கழகம்), டேவிட் ( டிசம்பர் 3 இயக்கம்), பஷீர் (மாணவர் இந்தியா) இவர்களுடன் சமூக ஆர்வலர்கள், ஊடகச் செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

 

மஜக மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, அகமது கபீர், அசாருதீன், மஜக மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், MJTS மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம், மத்திய சென்னை மஜக மாவட்டச் செயலாளர் பிஸ்மி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகங்கை அபுதாகிர், மஜக மாவட்ட துணைச் செயலாளர் காஜா மொய்தீன் உள்ளிட்ட மஜகவினரும் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்