21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் துவங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, ''முதலமைச்சர் சென்ற நிதிநிலை அறிக்கையிலேயே விழுப்புரத்தில் சமூக நீதிக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும், அதேபோல் இந்த பகுதியில் திராவிட இயக்க கொள்கைகளை வளர்த்த, அமைச்சராக இருந்த ஏஜி அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கும் ஆணையிட்டிருந்தார். இதில் 21 தியாகிகளுக்கான மணிமண்டபம் ரூ. 5.45 கோடி செலவில் கட்டப்பட இருக்கிறது. அதற்கான வரைபடங்கள் எல்லாம் உருவாகிவிட்டது. அதேபோல் திராவிட கொள்கைகளை வளர்த்த முன்னாள் அமைச்சர் ஏஜியின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு ரூ. 3.75 கோடி என்று சொன்னேன். அதற்கான வரைபடமும் தயாராகிவிட்டது.
கடந்த 28 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற போது பொதுப்பணித்துறை, நிதித்துறை, மற்ற அனைத்துத்துறை அதிகாரிகளிடம் மணிமண்டபம் குறித்த பணிகள் என்ன ஆனது என்று முதல்வர் கேட்டார். விழுப்புரத்தில் இந்த இரண்டையும் உடனடியாக முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டு இருக்கிறார்.
அதேபோல் சிதம்பரத்தில் மறைந்த தலைவர் இளையபெருமாளுடைய சிலையை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். அதற்கான பணிகள் எல்லாம் விரைவில் துவங்கப்பட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் அவை எல்லாம் முடிக்கப்படும். அதற்கான பணிகளைத்தான் இன்று பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சேர்ந்து செய்ய இருக்கிறார்கள். வெகு விரைவில் இந்த பணிகளை முடித்து முதலமைச்சர் அவர்களே திறந்து வைப்பார்'' என்றார்.
அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கியது தொடர்பான கேள்விக்கு, ''அதற்கு தான் தமிழக முதலமைச்சர் தெளிவாக நேற்றே பதில் சொல்லிவிட்டார். சிறப்பாக மக்களுடைய முதல்வராக இருக்கக்கூடிய முதலமைச்சரின் திட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் வேறுபட்ட கருத்து இல்லை'' என்றார்.