18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய(மணி7.20) நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 290 தொகுதிகள் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 235 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயபிரபாகரனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 20 வது சுற்று முடிவில் மாணிக்கம் தாகூர் 3,68,780 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விஜய பிரபாகரன் 3,63,232 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 1,58769 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக் 72,871 வாக்குகள் பெற்றுள்ளனர். 5,548 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.