கர்நாடகா மாநிலத்தில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. பின்னர் அதில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது விசாரணையில் தெரிய வந்தது. அண்மையில் தமிழகத்திலும் கோவையில் கார் வெடித்த வழக்கில் என்.ஐ.ஏ விசாரித்து வரும் நிலையில் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகக் கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கோவை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாகச் சாலையைக் கடக்கக்கூடிய பெடஸ்டியன்ஸ் வசதிக்காக அவர்களுக்கென்று சாலையைக் கடப்பதற்குத் தனி நேரம் ஒதுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்சுமி மில் ஜங்ஷனில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இன்று காந்திபுரம் கிராஸ் கட் ரோடு சிக்னலில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியில் பெடஸ்டியன் கிராசிங்க்காக எக்ஸ்க்ளூசிவ் டைமிங் கொடுத்திருக்கிறோம். அந்த நேரத்தில் மற்ற வாகனங்கள் எதுவுமே கிராஸ் ஆகாது. சாலையைக் கடக்கக் கூடிய பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பாகக் கடப்பதற்கு இது வசதியாக இருக்கும்''என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் “மங்களூர் சம்பவம் தொடர்பாகக் கோயம்புத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைய இடங்களில் முக்கியமாக எல்லைகளில் வாகன தணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தவிர இரவு ரோந்து, அதேபோல் அதிகாரிகள் எல்லா இடத்திலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருக்கிற மாதிரி ரோந்து வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றி வாகன சோதனை நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்தேகப்படக் கூடிய வாகனங்களைத் தணிக்கை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.